சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து இன்னும் இரண்டு வார காலத்தில் தண்ணீர் சப்ளை செய்யும் பணியை குடிநீர் ஆணையம் ஆரம்பிக்க உள்ளது.
தகவலின் படி., கடந்த 18 வருடங்களில் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னைக்கு, மற்ற பகுதிகளில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிக்கையின் படி, சென்னை மெட்ரோ குடிநீர் ஆணையமும், தென்னக ரயில்வேயும் ஜோலார்பேட்டையில் உள்ள நீர் நிலைகளை சனிக்கிழமை ஆய்வு செய்தன. மேட்டூர் குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூருக்கு வழங்கப்படும் உபரி நீர், புதிய திட்டத்தின் படி சென்னைக்கு திருப்பி விடப்பட உள்ளன. இந்த ஆய்வு குறித்த விவரங்கள், தலைமைச் செயலகத்தில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஒப்படைக்கப்பட்டு, அதன்பிறகு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க - ஒரே நாளில் திண்டுக்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை... இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
50 சரக்கு பெட்டிகள் கொண்ட ரயில் மூலம், தினம் நான்கு முறை பயணம் செய்தால், சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்க முடியும். ரயிலின் மொத்த தண்ணீர் தேக்க அளவு 2.6 மில்லியன் லிட்டராகும். கீழ்பாக்கத்தில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டுச் செல்லப்பட உள்ளது.
முன்னதாக, வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்லப்படும் திட்டத்திற்கு திமுகவின் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 'வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டால், அது மாவட்டத்தில் பெரும் போராட்டத்தை உருவாக்கும்' என்று அவர் கூறி இருந்தார்.
மேலும் படிக்க - Tamil Nadu Weather: அடுத்த 2 நாட்களுக்கு மழை நிச்சயம் - வானிலை மையம்!
ஆனால், அதன்பிறகு இச்செய்தியை மறுத்த துரைமுருகன், "ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்ல நான் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவல் தவறு. ஒரு தவறான பிரசாரம் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "வேலூரில் இருந்து தினம் கொண்டு வரப்படும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரினால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் அளவு குறையாது" என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு, சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, ஈரோட்டில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.