சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அத்தியாவசிய குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால், ஜூலை 30 முதல் மூன்று நாட்களுக்கு சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 30 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 10 மணி வரை நீடிக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 7 முதல் 13 வரையிலும், தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் இந்த தடை இருக்கும் என கூறப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பூந்தமல்லி பைபாஸ் சாலையில் புதிதாக பொருத்தப்பட்ட 2,000 மிமீ விட்டம் கொண்ட பிரதான குழாயை செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகரின் தற்போதுள்ள விநியோக அமைப்புடன் இணைக்க உள்ளதால் இந்தத் தடை ஏற்பட உள்ளது. இந்த மேம்பாடு, நீர் விநியோக திறனை ஒரு நாளைக்கு 265 மில்லியன் லிட்டரில் இருந்து 530 மில்லியன் லிட்டராக அதிகரிக்கவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், உற்பத்தியை திறம்பட இரட்டிப்பாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதிக்கப்படும் மண்டலங்கள்:
அம்பத்தூர் (மண்டலம் 7)
அண்ணா நகர் (மண்டலம் 8)
தேனாம்பேட்டை (மண்டலம் 9)
கோடம்பாக்கம் (மண்டலம் 10)
வளசரவாக்கம் (மண்டலம் 11)
ஆலந்தூர் (மண்டலம் 12)
அடையார் (மண்டலம் 13)
தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் முன்னதாகவே போதுமான குடிநீரை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரடி குழாய் இணைப்புகள் இல்லாதவர்கள் அல்லது குறைந்த நீர் அழுத்தம் உள்ளவர்களுக்கு, டேங்கர்கள் மற்றும் பொது குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் ‘டயல் ஃபார் வாட்டர்’ அம்சம் மூலம் குடியிருப்பாளர்கள் டேங்கர் சேவைகளை அனுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது