கடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை? கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு!

வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது

By: Published: January 10, 2019, 7:37:42 PM

வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளும், 15 ஆண்டுகளுக்கு பிறகு, கடுமையான வறட்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நடப்பாண்டில், சென்னை மாநகரில், குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலைமையை சமாளிக்க, அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

சென்னை மாநகரின் தினசரி குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 55 கோடி லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  உண்மையில், 45 கோடி லிட்டர் அளவிற்கு மட்டுமே, தற்போது நீர் வினியோகம் ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தற்போதே நீர் வினியோக மையத்தில் இருந்து கடைகோடியில் உள்ள பகுதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் வினியோகம் இல்லை.

பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய நான்கு ஏரிகள் தான் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது, இந்த ஏரிகளின் நீர் இருப்பு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், நடப்பாண்டில், சென்னையின் குடிநீர் தேவையை எவ்வாறு சமாளிப்பது என சென்னை குடிநீர் வாரியம் விழிபிதுங்கி நிற்கிறது.

நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து தற்போது, 1.37 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக்கொண்டு, தற்போதைய நீர் வினியோக அளவுப்படி கணக்கிட்டால் கூட, பிப்ரவரி இறுதி வரை மட்டுமே தாக்குபிடிக்கும். அதிர்ஷ்டவசமாக, தென்மேற்கு பருவ மழை அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்ததால், மேட்டூர் அணை நீர் மூலம், வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளது. நீர்மட்டம் சரிவு இதில் இருந்து, ராட்சத குழாய் மூலம், சென்னைக்கு தினமும் 12 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படுகிறது.

பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தொடர்ந்து நீர் எடுக்கப்பட்டால் வீராணம் ஏரியும், இரண்டு மாதங்களில் சரிவை சந்திக்கும். இதனால், ஏப்ரல் முதல் அடுத்த வடகிழக்கு பருவமழை காலம் வரை, நிலைமையை சமாளிக்க மீஞ்சூர், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வாரியம் பெரிதும் நம்பியுள்ளது. இந்த நிலையங்கள் மூலமாக மட்டும், 20 கோடி லிட்டர் குடிநீர், தினமும் கிடைக்கும். இது சென்னையின் குடிநீர் தேவையை, நான்கில் ஒரு பங்கு தான் பூர்த்தி செய்யும்.

பருவ மழை பொய்த்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், விவசாய கிணறுகளில் இருந்து, லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் நீர் எடுக்கும் திட்டமும் கைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, உள்ளூர் நீர் ஆதாரங்கள், கல்குவாரி குட்டைகள், சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்து, நீர் எடுப்பதற்கான முயற்சியில், சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதைத்தவிர, தென்மேற்கு பருவ மழையால், நிரம்பிய மேட்டூர், பவானிசாகர் உள்ளிட்ட பெரிய அணைகளில் இருந்தும், சென்னைக்கு நீர் கொண்டு வர, பொதுப்பணித் துறையுடன், வாரியம் ஆலோசித்து வருகிறது.

2016ல், வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால் 2017 கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீராணம் ஏரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகள் தான், சென்னையை காப்பாற்றின. வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவைக்கு, அது ஓரளவு கை கொடுக்கும். கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் உதவும். கிருஷ்ணா நதி நீரையும் கேட்டு பெற வேண்டும். இவற்றைக் கொண்டு கோடையை சமாளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai water scarcity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X