தமிழ் சினிமாக்கள்ல தப்பு பண்ணினா தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன் தனக்கு கீழ் பணிபுரிபவரிடம் உயரதிகாரி சொல்வது போல வசனம் வரும்... நாமும் தண்ணி இல்லா காடு என்பது ஒரு உவமை என்று தான் நினைத்துக்கொண்டிருப்போம்....ஆனால், அது உவமை இல்லை உண்மை தான் எனும் அவல நிலையை நாம் விரைவில் உணரப்போகிறோம்.
ஆம், 2030ம் ஆண்டிற்குள் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, தண்ணி இல்லா காடாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச நீர்நிலைகள் குறித்த ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
சர்வதேச நீர்நிலைகள் குறித்த ஆய்வு மையம், சர்வதேச அளவில் குடிநீர் தட்டுப்பாட்டு, தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஆய்வுங நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள நீர்நிலைகளில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர், ஆண்டுதோறும் மக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக செலவழிக்கப்பட்டுவிடுகிறதாம்...
சமீபத்தில், சென்னையில் நிலவிவந்த தண்ணீர் பற்றாக்குறை, சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னையின் நீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்நிலைகளும் 2 மாதங்களுக்கு மேல் வறண்டு கிடக்கின்றன. சென்னையில் குடியேறும் மக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகளின் அளவு கணிசமான அளவிற்கு சுருங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மதுரை, கோவை, தர்மபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முதல் 80 சதவீதம் வரையிலான தண்ணீர் ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில், இந்த மாவட்டங்களிலும் அதீத அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது
விவசாயத்திற்கு நீர் பாசன முறைகளை மேம்படுத்துதல், நீர் ஆதாரங்களை காத்தல், பண்படுத்துதல், மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை அதிகளவில் அமைத்து இயற்கையின் கொடையான மழைநீரை அதிகளவில் சேகரித்து வருங்கால சந்ததியினருக்காக நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்தல் உள்ளிட்டவைகளின் மூலமே, பூதாகரமாக உள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.