தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நவம்பர் 6ம் தேதி இரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையும், தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Today : காற்று மாசு குறித்தும் மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "சென்னையில் காற்று மாசு இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளது. இந்த மாசு டெல்லியில் இருந்து வந்ததா அல்லது வேறு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விவாதம் தேவையில்லை.
சென்னை மட்டுமல்ல, விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தாவின்(AQI 500 வரை இங்கு சென்றிருக்கிறது) ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை பகுதிகளும் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையில் இருந்து காற்று மாசு குறையும். வடக்கு நோக்கி, மாசுபட்ட காற்றினை இழுத்துச் செல்லவிருக்கும் புல்புல் புயலுக்கு நன்றி.
தமிழகம், சென்னையில் மழை குறித்த நிறைய நல்ல செய்திகள் அடுத்தப் பதிவில்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வங்க கடல் பகுதியில் இன்று (நவ.6) புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.
"அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.