Chennai Weather News In Tamil: நீலகிரியில் இன்னும் 4 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. கோவை, தேனியிலும் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய பொறுப்பு அதிகாரி இன்று (ஆகஸ்ட் 10) பகல் 12 மணிக்கு வானிலை மைய வெப்சைட்டில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் வருமாறு:
Chennai Weather Forecast
Chennai Weather News: வானிலை அறிக்கை
ஆகஸ்ட் 11-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 13, 14-ம் தேதிகளிலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை இருக்கும். மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக, கடந்த 5 நாட்களாக மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நீலகிரிக்கு இன்னும் 4 நாட்கள் மழை அபாயம் இருக்கவே செய்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கக்கூடும். சில இடங்களில் மழை இருக்கும். வெப்பநிலை 29 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது.’ என்றார்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய சில பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என தெரிவித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. மேற்படி பகுதிகளில் அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.