Chennai Weather Today: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக மகிழ்ச்சியை தந்த காலை மழை, வியாழக்கிழமையும் தொடரும் என்கிற நல்ல செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்திருக்கிறார்.
சென்னையை குடிநீர் பஞ்சம் வாட்டி வதைத்துவிடுமோ என தவித்துக் கிடந்தவர்களுக்கு மழை ஆறுதல் கொடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த மழை பொழிவதுதான் பெரிய ஆறுதல். போதாக்குறைக்கு கர்நாடக மழையால் காவிரியிலும் தண்ணீர் பெருக்கெடுக்கிறது.
சென்னையில் கடந்த இரு நாட்களாக காலையில் நிலத்தை குளிர்விக்கும் அளவுக்கு மழை பொழிந்தது. இது குறித்து தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: ‘எதிர்பார்த்தது போலவே கே.டி.சி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை) ஏரியாவில் காலை மழை பெய்கிறது. கடலில் இருந்து வீசும் தென் திசைக் காற்று காரணமாக இது தொடரும்.
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமையும்கூட சென்னையில் காலை மழையை எதிர்பார்க்கலாம். வியாழக் கிழமைக்கு பிறகு மழை குறையும். தமிழகத்தின் இதர பகுதிகளான திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை போன்ற பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறியிருக்கிறார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (25-ம் தேதி) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட செய்தியில், ‘இன்று கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வியாழக்கிழமை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்’. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.