நீரில் மூழ்கிய கேரட் பயிர்கள்; தென்மேற்கு பருவமழையால் தத்தளிக்கும் நீலகிரி
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில், நீலகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 866.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Nilgiris weather record : தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில், நீலகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 866.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Advertisment
அதிகபட்சமாக பந்தலூரில் 87 மி.மீ மழையும், தேவலாவில் 81 மி.மீ மழையும், கூடலூரில் 72 மி.மீ மழையும் அவலாஞ்சியில் 76 மி.மீ மழையும், அப்பர் பவானி பகுதியில் 64 மி.மீ மழையும், நடுவட்டம், கெல்மோர்கன் பகுதியில் 60 மி.மீ மழையும், சேரங்கோடு பகுதியில் 42 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. உதகையில் 10.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 23 மற்றும் 24 தேதிகளில் கோவை, உதகை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெய்த மழையால், நீலகிரி மற்றும் கோவைக்கு இடையேயான, குன்னூர் சாலை வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
குன்னூர் அருகே கோலணிமட்டம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கோலணிமட்டம் பகுதியில், காட்டேரி அணைக்கு அருகே உள்ள ஆறு தூர்வாரப்படாத நிலையில் மலைக்காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வந்த வயல்களில் மழை நீர் புகுந்துள்ளது. கேரட், பீட்ரூட், வெள்ளைப் பூண்டு போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன.
காட்டேரி அணையில் சேர வேண்டிய நீர், முறையாக அணையில் கலக்காமல், ஆங்காங்கே தேக்கமடைந்து இறுதியில் விளைநிலங்களில் புகுந்துவிட்டது என்று உள்ளூர் விவசாயி கௌதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிற்கு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வெள்ள சேதத்தினை மதிப்பிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 29.74 மி.மீ மழை பெய்துள்ளது.
110 நாட்கள் இந்த அறுவடைக்காக நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இன்று மழைநீர் அனைத்தையும் மூழ்கடித்துவிட்டது. இதனால் நாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். பலமுறை இந்த நதியை தூர்வார வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். இருந்த போதும் போதுமான தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வெள்ள நீர் வடிந்த பிறகு இதற்கு விவசாயிகளே ஒரு நல்ல முடிவு காண இருக்கின்றோம் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil