Northeast Monsoon 2019: தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம்

Chennai weather : இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். 

Chennai Weather Today Forecast Southwest monsoon updates

Chennai weather Northeast monsoon : தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரத்திற்கும் தாமதமாக பெய்யத் துவங்கியது. ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கனமழை தான் எங்கும். செப்டம்பரம் இறுதி வாரம் வரை பெய்த கனமழையால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஆனால் காலம் தவறி பெய்த மழையால் விவசாயப் பொருட்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவின் வெங்காயத்தின் உற்பத்தி இயல்பைக் காட்டிலும் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை, வானிலை ஆராய்ச்சி மையம்  “இந்த நாளில் தான் துவங்கும்” என்று குறிப்பிட்டு கூறிய அதே அக்டோபர் 17ம் தேதி (இன்று) சிறப்பான ஆரம்பத்தை தந்துள்ளது. இன்றைய தமிழ்நாடு வானிலை குறித்த அப்டேட்களை ஆங்கிலத்தில் பெற

சென்னை வானிலை

சென்னையில் இன்று காலையில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகாலை 04:30 மணிக்கு துவங்கிய கனமழை 06:30 வரை கொட்டித்தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மழை இவ்வாறே தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.

மேலும் படிக்க : 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்

 

Live Blog

Northeast monsoon : இன்று தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

16:36 (IST)17 Oct 2019
வானிலை அறிக்கை

வங்க கடலில் நிலவும் காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாக தமிழகமெங்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15:01 (IST)17 Oct 2019
போக்குவரத்தில் தத்தளித்த வாகனங்கள்

இன்று காலை பெய்த மழையில் சென்னை வடபழனி சாலை, கிண்டி ரயில்நிலைய மேம்பாலப்பகுதிகள், நந்தனம் சிக்னல், கோடம்பாக்கம் சாலை, அண்ணாநகர்- கோயம்பேடு சாலை, போரூர் - பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை, நுங்கம்பாக்கம் சாலை, அண்ணா சாலை என திரும்பிய பக்கம் எல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மழை தண்ணீரில் மிதந்து சென்றன. 

14:47 (IST)17 Oct 2019
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை

நீலகிரி மாவட்டம்  குன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகல் நேரங்களில் விட்டு விட்டும், இரவில் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

14:08 (IST)17 Oct 2019
நாகையில் தொடர் மழை

நாகை மாவட்டம்  சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  தொடர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.  இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

13:26 (IST)17 Oct 2019
மீனவர்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்றும், அதனால் மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது

13:05 (IST)17 Oct 2019
தமிழகத்தில் மழை

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

12:46 (IST)17 Oct 2019
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை

சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, புரசைவாக்கம், வியாசர்பாடி, விமான நிலையம், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.

12:25 (IST)17 Oct 2019
அயனம்பாக்கத்தில் தேங்கிய மழை நீர் அகற்றம்

அயனம்பாக்கத்தில் பெய்த கனமழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் ஜே.சி.பி. மூலமாக மழைநீர் அகற்றப்பட்டது.

11:39 (IST)17 Oct 2019
ட்ராஃபிக்கில் சிக்கித் தவிக்கும் சென்னை சாலைகள்

தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில்  நீர் தேங்கி சென்னை சாலைகள் பயணிக்க ஏற்றதாக இல்லை. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. அலுவலகங்கள் மற்றும் கல்லூரி செல்லும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். 

Express photo : Janardhan Kaushik

10:20 (IST)17 Oct 2019
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையின் காரணமாக 1800 கன அடி நீர் அதிகமாக மேட்டூர் அணைக்கு வர துவங்கியுள்ளது. நேற்றுவரை 6,594 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 8,347 கன அடியாக உயர்ந்துள்ளது.

10:06 (IST)17 Oct 2019
கன்னியாகுமரி நிலவரம்

கன்னியாகுமரியின் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

09:23 (IST)17 Oct 2019
சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

09:15 (IST)17 Oct 2019
திருவண்ணாமலை நிலவரம்

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி. நகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படாததன் விளைவால் தான் இந்நிலை என மக்கள் குற்றச்சாட்டு.

09:11 (IST)17 Oct 2019
வீடுகளில் புகுந்த கனமழை

சென்னையில் காலையில் இருந்து சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவேற்காடு, அயனம்பாக்கம் மற்றும் வானகரம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி.

09:08 (IST)17 Oct 2019
நெல்லையில் கனமழை

கோவை, காஞ்சி, திருச்சி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நெல்லையின் கடங்கநேரியில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை

09:07 (IST)17 Oct 2019
தேனியில் கனமழை

தேனியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

08:43 (IST)17 Oct 2019
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவு

எட்டயபுரம் - 137 , கோவில்பட்டி - 49, கயத்தாறு - 49, ஒட்டப்பிடாரம் - 46, கடம்பூர் - 40, சாத்தான்குளம் - 38, கழுகுமலை - 33 (அளவுகள் மில்லி மீட்டரில்)

08:41 (IST)17 Oct 2019
ராமநாதபுரம் மாவட்டதில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையின் அளவு

தமிழகத்தில் குறைவான மழைப்பொழிவை பெறும் இடமான ராமநாதபுரம் மாவட்டத்தை வெளுத்து வாங்கியுள்ளது கனமழை. கடந்த இரண்டு நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் கீழே (அளவீடுகள் மில்லி மீட்டரில்) கடலாடி - 117, பரமக்குடி - 104, திருவாடனை - 85, தொண்டி - 82, ராமேஸ்வரம் - 47, தங்கச்சிமடம் - 35, முதுகுளத்தூர் - 34, ஆர்.எஸ். மங்களம் - 33

08:24 (IST)17 Oct 2019
KTC பெல்ட்டில் பதிவான மழையின் அளவு (2)

காட்டுப்பாக்கம் - 25, சோழிங்கநல்லூர் - 24, மாதவரம் - 21, பொன்னேரி - 20, செங்குன்றம் -16, மெரினா - 15, எண்ணூர் - 13, திருவிலாங்காடு - 10,  பூண்டி - 10, பாரீஸ் கார்னர் - 10 (அளவீடுகள் அனைத்தும் மில்லி மீட்டரில்) 

08:22 (IST)17 Oct 2019
KTC பெல்ட்டில் பதிவான மழையின் அளவு (1)

காஞ்சி - திருவள்ளூர் - சென்னை பெல்ட்டில் நேற்று மற்றும் நேற்று முன் தினம் என பருவமழைக்கு முன்பு பதிவான மழையின் அளவு குறித்து சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார் தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான். அவரின் அறிக்கைப்படி (அளவீடுகள் மில்லி மீட்டரில்) பூந்தமல்லி - 61, காஞ்சி - 53 ,செம்பரம்பாக்கம் - 51, கொரட்டூர் அணைக்கட்டு - 47, மீனம்பாக்கம் - 46, கிண்டி - 45, ஆலந்தூர் - 43, கே.கே. நகர் - 38,  திருவள்ளூர் - 36, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 36, தாமரைப்பாக்கம் - 29, நுங்கம்பாக்கம் - 28, அம்பத்தூர் - 28, திருத்தணி - 28, சோழவரம் - 27, கும்மிடிபூண்டி - 26

Regional meteorological department report : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை 20ம் தேதி வரை நீடிக்கும் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று அதிகப்படியான மழைப்பொழிவை பெற்ற இடங்கள்

திருவள்ளூரின் பூந்தமல்லியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராம்நாதபுரம் மாவட்டத்தின் பாம்பனில் 10 செ.மீ மழையும், நெல்லையின் ஆயக்குடியில் 9 செ.மீ மழையும், திருவள்ளூரின் பூண்டி, விருதுநகரின் சிவகாசி பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூரின் தாமரைப்பாக்கம், கிருஷ்ணகிரியின் போச்சம் பள்ளி, திருவள்ளூரின் செங்குன்றம் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Web Title:

Chennai weather northeast monsoon live updates ne monsoon commenced over tamil nadu puducherry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close