தமிழகத்தில் இனி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வெயில் அடிப்பதாகவும், மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்த நிலையில், தற்போது அங்கும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிரகரித்து இருக்கும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் வானிலை பற்றிய தகவல்களை அறிவித்தார். அதில், “தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும். இந்த வெப்பம் அதிகரிக்கக் கடல் காற்று மிகத் தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும். வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.” எனக் கூறினார்.