chennai weather today : சென்னையில் மழை பெய்யாதா? என ஏங்கிக் கொண்டிருந்த சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ், சென்னையில் இன்று மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, மேல்மங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கிய சாரல் மழை, சற்று நேரத்திலேயே சூறைக்காற்றுடன் கூடிய கனமழையாக மாறியது. இதனால் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது
செங்கோட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் சூறை காற்றுடன் கனமழை பொழிந்தது. இப்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தாலும் தலைநகரமான சென்னையில் மழை பெய்யாதது சென்னை வாசிகளை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர், இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புக்கு வாய்ப்புள்ளது. அதே போல் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.