chennai weather today : தமிழகத்தில் அதிகப்பட்சமாக 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் அதே நேரம் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வெப்பத்தை தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் ஏமாற்றம் அளித்து ஒடிசா பக்கம் ஒதுங்கியது. ஒடிசாவில் பேய்யாட்டம் ஆடிய ஃபனி புயல் தமிழகத்திற்கு ஒரே ஒரு நாள் மழையை தந்திருந்தால் கூட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை.
இந்நிலையில் ஃபனிக்கு பிறகு தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தனது ஆட்டத்தை காட்ட தொடங்கி விட்டது. காலை 7 மணிக்கே முகத்தை வெளியில் காட்ட முடியாத அளவிற்கு வெப்பம் ஆளை வாட்டி வதைத்து வருகிறது. இன்னும் 21 நாட்களுக்கு இந்த அக்னியை நாம் சமாளிக்க வேண்டும். அதே போல் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாரத்தில் 5 நாட்களுக்கு 1 முறை மட்டுமே குடிநீர் வரும் என்றும் குடிநீர் பாராமரிப்பு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனைவரின் பிராத்தனை மற்றும் தேவையும் ஒன்று தான். அது தான் மழை.
இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர், தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்னும் 5 நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும் என தெரிவித்தார். அதே நேரம் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
”சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகளவாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரை ஈரப்பதமுள்ள காற்று வீசும். இதற்கு பிறகு தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம்” என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகப்பட்சமாக திருத்தனியில் 43.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.