Chennai weather today northeast monsoon commences : வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் சென்னை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, நாகை, சேலம், மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனத்த மழைபொழிவுக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி துவங்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்திருந்தது. தமிழகம், புதுவை, ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள், கர்நாடகாவின் உள்பகுதி மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை தான் டெல்டா மற்றும் சென்னை பகுதிகளின் நீர் தேவைகளை தீர்க்கும் பருவமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையே தேவையான நீர் வரத்தை தந்திருப்பதால் வடகிழக்கு பருவமழை கோடைகாலத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சேமிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு. அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவக்கூடும்.
நேற்று அதிக மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று கொடைக்கானலில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அங்கிருக்கும் போட் கிளப் ஏரியாவில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகியின் கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளிலும், சேலத்தின் மேட்டூர் பகுதியிலும் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவையின் வால்பாறை, பொள்ளாச்சி, கோவை தெற்கு, சூலூர், சின்னக்கல்லாறு, நெல்லையின் சிவகிரி, சங்கரன் கோவில்,தென்காசி ஆகிய பகுதிகள்ளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.