Northeast Monsoon Tamil Nadu weather forecast : அக்டோபர் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சியாளார்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : அக்டோபர் மாதத்தில் ஏன் இவ்வளவு கனமழை? சிறப்பு கட்டுரை
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் 1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எங்கே?
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மற்றும் அதனை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Chennai weather
சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் சேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக்கூடும்.
பதிவான மழையின் அளவு
சோளவந்தான், சாத்தான்குளம், மற்றும் பென்னாகரம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏற்காடு, தஞ்சை பாப்பநாசம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, ஜெயம்கொண்டம், வெப்பந்தட்டி, கோவையின் சிங்கோனா ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
Kerala Flood
அக்டோபர் 1 முதல் 19ம் தேதி வரை கேரளாவில் 135% அதிக கனமழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண் சரிவு காரணமாக 27 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த காலத்தில் சாதாரணமாக 192.7 மி.மீ மழைப்பொழிவு மட்டுமே பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 453.5 மி.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. 200 கோடி மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil