Tamil nadu weather man chennai weather report : கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சென்னை மக்களை குளிர்வித்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் இரவில் நம்மை உறங்க வைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை புற நகரில் நேற்று மாலையில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும், புறநகரில் சில பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்!
போக்குவரத்து பிரச்சனையை விடுங்க மழை வந்தா மட்டும் போதும் என்கின்றனர் சென்னை வாசிகள். இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேலும் அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.இந்த மழையானது வரும் 27ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிகழ்வுகளை மழை அப்டேட்டுக்களை உடனுக்குடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி வரும் தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் இன்றைய தினம் மழைக் குறித்த புதிய அப்டேட்டை ஷேர் செய்து விளக்கியுள்ளார்.
இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ வங்கக்கடலில் வடக்குப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாதத்தற்கு முன்பே தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யவே வாய்ப்புக்கள் அதிகம். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் வரை நமக்கு ஆனந்தம் தான். கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவ்ரமடைந்துள்ளது.அடுத்த 2 நாட்களும் கடல்காற்று நமக்கு மழையை தரும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குஜராத் அல்லது பாகிஸ்தான் நோக்கி நகர வாய்ப்புக்கள் அதிகம். தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை மக்களை மகிழ்விக்கும்” என்று கூறியுள்ளார்.