Chennai weather update south Tamil Nadu gets heavy rainfall alert : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்று தென் தமிழகத்தை குறிவைக்கும் பருவமழை நாளை முதல் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழையாக பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்புகள் அதிகம். இன்று காலை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை. நந்தனம், தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் சென்னையில் நிலவும்.
நேற்று அதிகமான மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
தூத்துக்குடியின் சாத்தான்குளம், நீலகிரியின் தேவலா பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரியின் பூதப்பாண்டியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி, நெல்லையின் ராதாபுரம், நீலகிரியின் நடுவட்டம், திண்டுக்கல்லின் காமாட்சிபுரம், கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரியின் ஜி.பஜார், திருவண்ணாமலையின் வந்தவாசி, காஞ்சியின் மதுராந்தகம், உருத்திரமேரூர், திண்டுக்கல், மற்றும் கோவையின் வால்பாறை பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : இன்றைய வானிலை : மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எம்.டி… வலுவடைகிறது பருவமழை
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த இரண்டு தினங்களுக்கு தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இலங்கைக்கு அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடல்பகுதிகள், குமரிகடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.