சென்னையில் நேற்று (அக்டோபர் 14) முதல் மழை பெய்து வரும் நிலையில், எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (அக்டோபர் 16) அல்லது நாளை மறுநாள் (அக்டோபர் 17) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று (அக்டோபர் 15) கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மணலியில் 92.1 மி.மீ மழை பெய்துள்ளது. அடுத்தப்படியாக அண்ணா நகர் மேற்கு பகுதியில் 91.2 மி.மீ மழை பெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் 90 மி.மீ மழை பெய்துள்ளது. பேசின் பிரிட்ஜ், வடபழனி பகுதிகளில் 80 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/c5bebe18-218.png)
மாதாவரம், அயப்பாக்கம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், மதுரவாயல், உத்தண்டி மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் 70 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. புழல், சென்னை சென்ட்ரல், அமைந்தகரை, ஐஸ் ஹவுஸ், வளசரவாக்கம், ஆலந்தூர், முகலிவாக்கம், மீனம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் 60 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
கத்திவாக்கம், திருவொற்றியூர், ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 50 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. தண்டையார்பேட்டை மற்றும் பெருங்குடி பகுதிகளில் 40 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“