தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 14) இரவு மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவதால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப் பாதைகளில் குளம்போல் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தண்ணீர் தேங்கியுள்ள பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகிய 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரியில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர். வேளச்சேரி ஏ.ஜி.எஸ் காலனியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முழங்கால் வரை வெள்ளநீர் சூழ்ந்ததால் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வீடுகளில் சிக்கிய முதியவர்கள், பெரியவர்கள் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தரமணியில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை கொரட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதேபோல் வடபழனி 100 சாலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாசர் பாடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வியாசர்பாடி பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. முல்லை நகர், பாரதி நகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“