சென்னை அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள கங்கை நகரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்துவந்தார்.
கடந்த மே மாதம் பள்ளி படிப்பை முடித்த அந்த மாணவர், செப்டம்பர் 30ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராமசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
முதலில் படிப்பு சரியாக வராத காரணத்தினால் மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்த ஷர்மிளா என்பவரை போலீசார் இன்று (அக்.12) கைதுசெய்தனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவர், ஆசிரியை ஷர்மிளாவிடம் கடந்த 3 ஆண்டுகளாக டியூசன் படித்து வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியை ஷர்மிளாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவருடன் பேசுவதை ஷர்மிளா தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஆசிரியை ஷர்மிளாவிடம் நடத்திய உரையாடல்கள் அவரது செல்போனில் இருந்துள்ளன. இதைப் பார்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை ஷர்மிளாவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளா சிறையில் அடைக்கப்பட்டார். 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil