/indian-express-tamil/media/media_files/2025/01/29/a2odGKlGGb9lfsKGQOwJ.jpg)
சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை அரசியல் கொடி உள்ள சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை அரசியல் கொடி உள்ள சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 29, 2025
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை… pic.twitter.com/Z03hAuRLml
அண்ணாமலை கண்டனம்
சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பெண்களை தி.மு.க., கொடி கட்டிய காரில் துரத்தி சென்ற வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது. போலீசாருக்கு எந்த வித உபகரணங்களும் கொடுக்காமல் தி.மு.க., அரசு இருக்கிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது.
செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக நான் பார்க்கிறேன். செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள். செய்தியாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்வது ஊடகங்களுக்கு எதிராக தி.மு.க.,வின் மனப்பான்மையை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார்." என்று கூறியுள்ளார்.
இ.பி.எஸ் கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், "சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை தி.மு.க. கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் தி.மு.க.வினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்துதான் செயல்படுமா?
யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த சார்-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ஈ.சி.ஆரில், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக எஃப்.ஐ.ஆர் பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
அன்புமணி கண்டனம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், " கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
டி.டி.வி தினகரன் கண்டனம்
அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தி.மு.க கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.