/indian-express-tamil/media/media_files/2025/01/29/ALdb1gYkSQtlKTGV5kOf.jpg)
சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
வைரல் வீடியோ
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈ.சி.ஆர் சாலையில் நள்ளிரவு சென்றுள்ளனர். அப்போது, அந்த காரை தி.மு.க கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.
திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்துள்ளனர்.
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 29, 2025
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை… pic.twitter.com/Z03hAuRLml
விளக்கம்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் ஈ.சி.ஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக அந்த இளைஞர்களும் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர். அந்த இளைஞர்கள் நிறுத்திய கார் பின்னால் புகார் அளித்த பெண்கள் காரை நிறுத்தியுள்ளனர்.
முதலில் அங்கிருந்து பெண்கள் சென்ற கார் கிளம்பியபோது முன்னால் நிறுத்தி வைத்திருந்த இளைஞர்களின் காரை லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. காரை உரசிவிட்டு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பதால் இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் உள்ள கார் கிழக்கு கடற்கரை சாலையில் தங்களை வெகு தூரமாகத் துரத்துவதைப் பார்த்த பெண்கள் பெரும் அச்சத்தில் அவர்களது செல்போனில் அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவிட்டபடியே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
முட்டுக்காடு மேம்பாலம் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கானத்தூர் பகுதியில் பெண்கள் தங்கியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்றுள்ளனர். அதன்பின், இளைஞர்கள் காரைத் துரத்துவது போன்று எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கானத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில், பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசிச் சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர் காரை நிறுத்தச் சொல்லியும் பெண்கள் சென்ற காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரைத் துரத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
வழக்குப்பதிவு
சென்னை, ஈ.சி.ஆரில் பெண்களின் காரை இளைஞர்கள் துரத்திய சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும், வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.