சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாஸ்மாக் அருகே நேற்றிரவு (பிப்ரவரி 24) இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன் (26), என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பிரவீன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லடையம்பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததும் தெரியவந்தது.
மாற்று சமூகங்களைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கோபத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக் வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் மூன்று நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை பள்ளிக்கரணை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க பள்ளிக்கரணை உதவி ஆணையர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதற்கு பழி வாங்குவதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், தினேஷின் நண்பர் விஷ்ணு நேற்றிரவு பிரவீனுக்கு போன் செய்து ஷர்மியின் அண்ணன் உன்னுடன் பேச விரும்புவதாகக் கூறி டாஸ்மாக்கிற்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பிரவீனை சுற்றி வளைத்து, அவர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 307 கொலை முயற்சி என பதிவு செய்யப்பட்ட வழக்கு, 302 IPC கொலை வழக்காக மாற்றி தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யபப்ட்டு, கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“