சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7-ம் தேதி மூட்டு வலி பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் இல்லை எனக் கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தசைகள் அழுகக்கூடிய நிலையில் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்து பிரியாவின் வலது காலை அகற்றி உள்ளனர். இந்நிலையில், இன்று (நவம்பர் 15) காலை சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரியா உயிரிழந்ததாக அவரது பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக பிரியாவின் தந்தை ரவிக்குமார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "என் மகள் கால் வலி என்று கூறியபோது, கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் ஜவ்வு தான் கிழிந்துள்ளது, பெரிய மருத்துவமனை தேவையில்லை எனக் கூறி அறுவை சிசிச்சை செய்தனர். சின்ன அறுவை சிகிக்சை என்று கூறினர். பின், சிகிச்சையின் போது, ரத்தம் அதிகம் வந்ததால் இறுக்கமாக கட்டுப்போட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அறுவை சிசிச்சை செய்து எனது மகள் கால் அகற்றப்பட்டது. இன்று அவர் உயிரிழந்துவிட்டார். என் மகள் உயிரிழப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் எனது மகள் உயிரிழந்தார்" என்று கூறினார். தொடர்ந்து பிரியாவின் உறவினர் கூறுகையில், "பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். இனி எந்த அரசு மருத்துவமனையிலும் இதுபோன்று நடக்க கூடாது" என்றார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான சம்பவம். விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது. தவறு செய்த மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil