மைதானத்தில் காலணிகளை வீசியெறிந்த ரசிகர்கள் கைது!

சேப்பாக்கம், உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் ஐபிஎல் போட்டிக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பே இதற்கு காரணம்!

By: Updated: April 11, 2018, 12:46:51 AM

சேப்பாக்கம், உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் ஐபிஎல் போட்டிக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பே இதற்கு காரணம்!

சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் எத்தனையோ பரபரப்பான பதற்றம் நிறைந்த கிரிக்கெட் போட்டிகளை சந்தித்திருக்கிறது. முதல் முறையாக கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டங்களால் இவ்வளவு அதிக பதற்றத்தை சந்திக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 4 நாட்களுக்கு முன்பே சென்னையில் இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் இதே கோரிக்கையை வைத்தனர்.

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான இன்றைய (ஏப்ரல் 10) ஆட்டம்தான் இந்த சீஸனின் முதல் ஆட்டம்! இன்னும் 6 ஆட்டங்கள் இந்த சீஸனில் சேப்பாக்கத்தில் இருக்கின்றன. இந்த ஆட்டங்களை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உரிய அவகாசம் ஐபில் நிர்வாகத்திற்கு இருந்தது.

தமிழ்நாடு அரசும் இங்குள்ள நிலவரத்தை ஐபிஎல் நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டியது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் பிடிவாதமாக இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துகிறது. ஏதோ அழுத்தம் காரணமாக தமிழ்நாடு அரசும் அனுமதி மறுக்காமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

சேப்பாக்கத்தில் நிமிடத்திற்கு நிமிடம் டென்ஷனை பற்ற வைக்கும் நிகழ்வுகளின் LIVE UPDATES இங்கே..

இரவு 8.50 : போட்டி நடந்துக் கொண்டிருக்கும் போது, மைதானத்தில் காலணிகளையும், சட்டைகளையும் வீசியெறிந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எட்டு பேர் கைது.

இரவு 7.10 : மே 17 இயக்கத்தினரும் திரண்டு வந்து சென்னை அண்ணா சாலை பகுதியில் போராட்டம் நடத்தினர். அண்ணா சாலை சிம்சன் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் போலீஸ் தடியடி நடந்தது.

இரவு 7.00 : ரஜினிகாந்த் ரசிகர்களும் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Cauvery Protesters Against IPL2018 chennai LIVE UPDATES ரஜினிகாந்த் ரசிகர்களின் போராட்டம்

மாலை 6.45 : போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், சீமான், கருணாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாலை 6.40 : சென்னை அண்ணா சாலையில் புரட்சிகர மாணவர் இயக்கத்தினர் கைதாக மறுத்து ஆவேசமாக மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது.

மாலை 6.05 : நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மைதானம் அருகே ஊடுருவி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு மஞ்சள் பனியன் அணிந்து வந்த சி.எஸ்.கே. ரசிகர்கள் விரட்டப்பட்டனர். நாம் தமிழர் கட்சியினர் தன்னை தாக்கியதாக டோனியின் ரசிகரான சரவணன் என்பவர் புகார் செய்தார்.

மாலை 6.00 : தொடர் போராட்டங்கள் காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சீமான், பாரதிராஜா, வைரமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக பாரதிராஜா குற்றம் சாட்டினார்.

மாலை 6.00 : வழக்கமாக எந்தப் போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாத கவிஞர் வைரமுத்து, அண்ணாசாலையில் காவிரி உரிமைக் குழுவின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

மாலை 5.55 : சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி காவிரி மீட்புக் குழுவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால் அந்த ஏரியாவே போர்க்களம் ஆனது. இதற்கிடையே போட்டியைக் காண வந்த ரசிகர்களை, சி.எஸ்.கே அணியின் மஞ்சள் நிற பனியன்களை கழற்றக் கோரி போராட்டக்காரர்கள் சிலர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாலை 5.50 : சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சி.எஸ்.கே. வீரர்கள் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மாலை 5.50 : அண்ணா சாலை போராட்டத்தில் சி.எஸ்.கே அணியின் மஞ்சள் நிற பனியன்களை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தினர்.

மாலை 5.45 : காவிரி உரிமைக் குழுவினர் போராட்டத்தின்போது அண்ணா சாலையில் போலீஸார் நடத்திய தடியடியில் இயக்குனர் வெற்றிமாறன் காயம் அடைந்தார். போலீஸ் தடியடியால் அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது. இதற்கிடையே நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மைதானத்தின் பிரதான சாலையில் குவிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாலை 5.40 : மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் அண்ணா சாலையில் இருந்து போலீஸ் தடுப்பை மீறி ஸ்டேடியத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். அவர்களை போலீஸார் வழிமறித்து தடியடி நடத்தி கலைத்தனர்.

மாலை 5.35 : மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அண்ணா சாலையில் மறியல் செய்தனர். மத்திய அரசுக்கும், ஐபிஎல் போட்டிக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

மாலை 05.20 : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அண்ணாசாலையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலர் புதிய கொடி ஒன்றை வைத்துள்ளனர். தமிழ்நாட்டுக் கொடி என அதை அறிமுகம் செய்துள்ளனர். சேர, சோழர், பாண்டியரின் சின்னம் அதில் இடம் பெற்றுள்ளது. பல தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருவதால், அண்ணா சாலையே முடங்கியுள்ளது.

மாலை 05.15 :  தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையைச் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தி வருகிறது. இயக்குனர் பாரதிராஜா,  வெற்றிமாறன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மாலை 5.00 : சென்னை, அண்ணா சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மறியல் செய்தனர். அப்போது ஐபிஎல் டிக்கெட் நகல்களை தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸார் அவற்றை கைப்பற்ற முயன்றதால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாலை 4.30 : டெல்லியில் மத்திய உள்துறை செயலாளரை ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா சந்தித்தார். சென்னையில் இன்று இரவு நடைபெறும் சிஎஸ்கே, கே.கே.ஆர். இடையிலான ஆட்டத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்யும்படி அவர் கோரினார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உள்துறை செயலாளர் கூறினார்.

மாலை 4.20 : வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 2-வது கட்டமாக அண்ணா சாலை பகுதியில் இருந்து திரண்டு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து அங்கு மறியல் செய்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மாலை 4.10 : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். அவர்களை ஸ்டேடியம் அருகே வாலஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில்  போலீஸார் நிறுத்தினர். அங்கு சாலையில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஐபிஎல் போட்டிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

மாலை 3.45 : போராட்ட அறிவிப்புகள் காரணமாக மைதானத்திற்குள் செல்போன், தண்ணீர் பாட்டில்கள், பதாகைகள் கொண்டு செல்ல தடை விதித்து சேப்பாக்கம் மைதான நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. செல்போனுக்கு தடை விதிப்பது ரசிகர்கள் வருகையை வெகுவாக பாதித்துவிடும் என ஐபிஎல் நிர்வாகிகளே சுட்டிக் காட்டியதை தொடர்ந்து செல்போனுக்கு அனுமதி கொடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாலை 3.30 : புரட்சிகர மாணவர் இயக்கம், மே 17 இயக்கம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளும் அதே இடத்தில் இன்று மாலையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன. இயக்குனர் பாரதிராஜா, சத்தியராஜ், தங்கர்பச்சான், வி.சேகர், செல்வமணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு கலை இலக்கிய பேரவை சார்பிலும் மாலையில் அண்ணா சாலையில் கூடுகிறார்கள்.

மாலை 3.15 : வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி, பெ.மணியரசன், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தலைமையிலான அமைப்புகள் இணைந்த காவிரி உரிமை மீட்புக் குழு இன்று மாலை 6 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட இருப்பதாக கூறியிருக்கின்றன. இந்த அமைப்புகளை ஸ்டேடியத்தின் அருகே அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்துவிட்டனர்.

எனவே ஸ்டேடியத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கூடுவதற்கு இந்த அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள். சரியாக போட்டிக்கு ரசிகர்கள் திரண்டு வரும் வேளையில் இவர்கள் போராட்டம் அறிவித்திருப்பதால் இந்த அமைப்புகளின் போராட்டம் பதற்றத்தை கிளப்பியிருக்கிறது.

பிற்பகல் 2.45 : சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல் 10) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 50,000 ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில், 3 காலரிகளுக்கு அனுமதி இல்லை. அவற்றை தவிர்த்து, 38,000 ரசிகர்கள் அமர முடியும்.

மாலை 3.00 : இன்று மாலையில்தான் அனைத்து அமைப்புகளும் போராட்டம் நடத்துவதாக கூறியிருந்த நிலையில், காலையிலேயே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிலர் ஸ்டேடியத்திற்கு பூட்டு போட கிளம்பி வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் மடக்கி கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள், ‘இது டிரெய்லர்தான். சாயங்காலம்தான் மெயின் பிச்சர் இருக்கும். மலைப்பாம்புகளும், சாரைப் பாம்புகளும் மைதானத்திற்குள் படையெடுத்து வரும்’ என மிரட்டிவிட்டு சென்றனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chepauk cricket stadium cauvery protesters against ipl chennai live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X