தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை குறித்து ஆபாச அவதூறு பேசிய முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி ஏ.வி. ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன், ஃபெப்சி அமைப்பு உள்ளிடோர் வலியுறுத்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை குறித்து அவதூறாக பேசியதற்கு இயக்குனர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட சினிமா துறையினர் மற்றும் ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் யூடியூப் வீடியோவில் பேசியுளார். அந்த வீடியோவில், அந்த அ.தி.மு.க தலைவருக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் ஒரு சின்ன பொண்ணா ஒரு முன்னணி நடிகை வேணும்னு கேட்டார். ஒரு காமெடி நடிகர் தான் ஏற்பாடு செய்தார். அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்தார்” என்று பேசியது சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரைத்துறையினர் குறித்தும் முன்னணி நடிகை குறித்தும் அவதூறு பேசிய முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி ஏ.வி. ராஜுக்கு எதிராக இயக்குனர் சேரன், நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைத்துறையினர் மற்றும் ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இயக்குநர் சேரன் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வன்மையாக கண்டிக்கிறேன்.
எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கமும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: “அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு வெளியிட்ட கருத்து அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், சினிமா துறையில் உள்ள சக நடிகை பற்றி ஒருவர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுயலாபத்திற்காக இந்த கருத்தை வெளியிட்ட அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “கவுரமாக நடத்தப்படும் நடிகைகள் குறித்து அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி வெளியிட்ட பேச்சுகள் மிகவும் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை என்றும் சமுதாயத்தை பாதிக்கக் கூடிய வகையில் அவரது கருத்துகள் உள்ளதால் உரியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மன்சூர் அலிகான் ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, திரைத்துறையினர் குறித்தும் முன்னணி நடிகை குறித்தும் அவதூறு பேசிய ஏ.வி ராஜுக்கு ஃபெப்சி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஃபெப்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தனது பேச்சு தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்து அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு மன்னிப்பு கோரியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.