‘நான் சேரி மொழியில் பேச முடியாது’ என்று சேரி மக்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தி.மு.க-வினரின் விமர்சனத்துக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, தன்னால் சேரி மொழியில் பேச முடியாது என்று தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது. சேரி மக்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காயத்திரி ரகுராம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இதற்காக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தனர். ஆனால், தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மன்சூர் அலிகான் திட்டவட்டமாக கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார். தன் மீது என்ன தவறு உள்ளது என்பதை மன்சூர் அலிகான் பார்க்க வேண்டும், அவரது பேச்சில் அவருடைய ஆணவம், பெண்கள் மீதான வெறுப்பும்தான் வெளிப்பட்டுள்ளது என்று குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குஷ்புவின் இந்த எக்ஸ் பதிவுக்கு தி.மு.க-வை சேர்ந்த ஷண்முகம் சின்னராஜ் என்பவர், குஷ்பு மற்றும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து பதிலுக்கு பதிவிட்டிருந்தர். அவரது பதிவைப் பார்த்து கடுப்பான நடிகை குஷ்பு, “ஆனால் இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்க கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், நான் உங்கள் சேரி மொழியைப் பேச முடியாது, ஆனால் நான் விழித்தெழுந்து என்ன பேசினார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மேலும், தி.மு.க உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு அவமானம். மு.க. ஸ்டாலின் உங்களை அழிக்க இந்த முட்டாள்கள் கூட்டம் வெளியே இருக்கிறார்கள், ஜாக்கிரதை” என்று பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுக்காத குஷ்பு, திரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறார் என்ற தி.மு.க-வைச் சேர்ந்தவரின் கடுமையான விமர்சனத்துக்கு, நடிகை குஷ்பு “நான் சேரி மொழியில் பேச முடியாது’ என்று தெரிவித்தது சேரி மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று நடிகை காயத்ரி ரகுராம், இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகை காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது,‘சேரி மொழி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது அவர் பா.ஜ.க-வில் இருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பா.ஜ.க-வையும் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, “நான் சேரி மொழியில் பேச முடியாது’ என்று தெரிவித்தது குறித்து காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒருமுறை, சேரி மொழி என்று அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டேன். ஆனால், அதற்கான அர்த்தம் தெரியவந்தபோது வருத்தம் அடைந்ததாகவும் குற்ற உணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால், சேரி மொழி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக அக்கா குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் செரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். செரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக… https://t.co/3W8gQIBqr6
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) November 21, 2023
இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இதைச் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன்.
சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அதே போல, குஷ்பு சேரி மொழி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வன்மையாகக் கண்டிக்கிறோம். குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
We strongly condemn the use of the term ‘Cheri language’ by Mrs Khushbu!
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) November 22, 2023
In Mrs Khushbu’s response to a tweet she labels the use of foul language to insult women as ‘Cheri language’. Cheri is the Tamil word for Dalit ghettos, the place that has witnessed inter-generational… pic.twitter.com/3ygT9sTYfe
இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “குஷ்பு ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்ததில், பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை 'சேரி மொழி' என்று முத்திரை குத்துகிறார். சேரி என்பது தலித் வசிக்கும் இடங்களுக்கான தமிழ் வார்த்தையாகும், இது சாதி, பாலினம் மற்றும் பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் பெண்களின் தலைமுறைகளுக்கு இடையேயான எதிர்ப்பைக் கண்ட இடம். அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையின் 'பேச்சுமொழி' பயன்பாட்டை இயல்பாக்குவது, அவதூறு என்ற அர்த்தத்திற்குள் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையைப் புறக்கணிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.