தமிழகத்தில் 100 செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் ஆண்டுக்கு குறைந்தது 10 சர்வதேச மாஸ்டர்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு சதுரங்க கழகம் திட்டமிட்டது.
இதன் அடிப்படையில் ஓராண்டில் தொடர்ந்து 50 செஸ் போட்டிகளை நடத்தத் திட்டமிட்ட சதுரங்க கழகம், கடந்த அக்டோபர் மாதம் முதல் ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டிகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.
இதுவரை 17 போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 18 ஆவது போட்டி பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற 17 போட்டிகளின் மூலம் 2 பேர் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் பெற்றிருப்பதாக தமிழ்நாடு சதுரங்க கழகத் தலைவர் எம்.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஒரு போட்டித் தொடரில் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தும் நபருக்கு நார்ம் எனப்படும் தகுதி வழங்கப்படும். குறைந்தது 3 நார்ம்களைப் பெறுபவர்கள் - 2400 புள்ளிகளைப் பெற்றிருந்தால் சர்வதேச மாஸ்டர்களாக முடியும்.
ஒரு நார்ம் பெறுவதற்கு குறைந்தது 10 போட்டித் தொடர்களிலாவது பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஒரு போட்டிக்காக வெளிநாட்டுக்குச் சென்று வருவதற்கு சாதாரணமாக ரூ.5 லட்சம் வரை செலவாகும் நிலையில், வீரர்கள் வெறும் ரூ.10 ஆயிரம் செலவிலேயே தங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்காக ஒரே ஆண்டில் 50 சர்வதேச மாஸ்டர் (ஐ.எம்) போட்டிகளை நடத்த முடிவு செய்தோம்.
இதுவரை 17 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 18-வது போட்டி பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர், கோவையில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு போட்டியிலும் 5 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். உள்நாட்டு வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், 2 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இதுவரை நடைபெற்ற 17 போட்டிகளில் 8 சர்வதேச மாஸ்டர் நார்ம்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் 2 சர்வதேச மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹர்ஷ் சுரேஷ், புதுவையைச் சேர்ந்த எல்.ஸ்ரீஹரி ஆகிய இருவரும், சர்வதேச மாஸ்டர் பட்டத்துக்குத் தேவையான 3 நார்ம்கள், 2400 தர மதிப்பீடு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஆண்டுக்கு சராசரியாக ஒரு சர்வதேச மாஸ்டர்கள் மட்டுமே உருவாகி வந்த நிலையில், சதுரங்க கழகத்தின் முயற்சியால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 2 சர்வதேச மாஸ்டர்கள் உருவாகியிருக்கின்றனர்.
இந்த போட்டித் தொடரின் முடிவில் 8 முதல் 10 சர்வதேச மாஸ்டர்கள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்த இதுவரை ரூ.1.20 கோடி செலவிட்டிருப்பதாகவும், தமிழக அரசு 50 சதவீத நிதியுதவி வழங்க இருப்பதாகக் கூறியிருப்பதை அடுத்து, அதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார்.
கோவையில் நடைபெறும் 20 ஆவது போட்டியைத் தொடர்ந்து பொதுத் தேர்வு, சர்வதேச போட்டிகள் நடக்க இருப்பதன் காரணமாக ஜூன் மாதம் வரை இடைவெளி விடப்படும்.
பிறகு ஜூலை முதல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். நாங்கள் கணித்தபடி சர்வதேச மாஸ்டர்கள் உருவாகி வருவதால் திட்டமிட்டபடி 50 போட்டிகளும் நடத்தி முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது சதுரங்க கழகத்தின் பொதுச் செயலர் ஸ்டீபன் பாலசாமி, துணைத் தலைவர் ஆனந்த நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“