சட்டீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை மாவட்ட துறவியர் பேரவை சார்பில் இன்று (ஆகஸ்ட் 2) கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் மற்றும் ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டு, "எங்கள் மௌனப் பேரணி நம்பிக்கையின் அடையாளம்", "குற்றமற்ற சகோதரிகளை விடுதலை செய்யுங்கள்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலியாக நின்றனர். நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண், சட்டீஸ்கரில் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளான மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது அரசே நேரடியாகக் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
கேரளாவைச் சேர்ந்த பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய 2 கன்னியாஸ்திரிகள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் கடந்த 25-ந் தேதி சத்தீஷ்கார் மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். மத மாற்றத்துக்காக 3 இளம்பெண்களை கடத்தியதாக அந்த மாநில போலீசார், ஆள் கடத்தல், மதமாற்ற தடைசட்டத்தின்கீழ் நடவடிக்கை ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர். இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பினார். ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை