தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அதுபோல் திருமணங்கள் நடக்கவில்லை. ஆனாலும் அவர்களது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அரசால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்தனர்.
எனவே, அந்த சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு நான் கடிதம் எழுதினேன்’ என, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ரவி அளித்த பேட்டியின் அடிப்படையில், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ‘சிதம்பரம் சிறுமியரிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படவில்லை’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
குழந்தைத் திருமணம் நடந்தாக புகார்கள் வந்தன. அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின், அதற்கான ஆதாரங்களை திரட்டி, சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில், நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குற்றத்தில் ஈடுபட்ட எட்டு ஆண்கள், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமியரில், சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம், பெண் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. அந்த சிறுமியர் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல். அதுபோன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை.
நான்கு குழந்தைத் திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. அதனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“