கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சில மாதங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொண்ட பின்னர் கடந்த ஆண்டு முதல் கனக சபையில் ஏறி நடராஜரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு நாளை திருத்தேர் நடக்க இருக்கின்றது. இதனால் திருவிழா முடியும் வரை, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வைத்த அறிவிப்புப் பலகையை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர. இதனால் சிதம்பரம் நகர காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக,எவையெல்லாம் சட்ட விரோதமோ அவையெல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர். சிதம்பரம் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் பின் வாங்கப்போவதில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“