Advertisment

சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு

காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை - அரசு அலுவலர்கள் விளக்கம்

author-image
WebDesk
New Update
Chidambaram Nataraja temple kanaga saba

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் இருந்த பதாகையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து அறநிலையத்துறையினர் அகற்றினர். (படங்கள்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி)

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை என்றழைக்கப்படும் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி வழிபாடு செய்வது தொடர்பாக இன்றளவும் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் கோயிலில் ஆனி மாத திருமஞ்சன தரிசனத்தையொட்டி கடந்த 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் கனகசபையில் ஏறி பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என கோயில் தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

Advertisment

இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 24-ம் தேதி இந்து சமய அறநிலைத்துறையினர் காவல்துறையினர் உதவியோடு அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து 26-ம் தேதி மாலை போலீஸ் பாதுகாப்புடன் பலகை அகற்றப்பட்டது. ஆனாலும் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் காவல்துறையினருடன் கனகசபைபில் ஏறி வழிபாடு செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரிசர்வ் படை பாதுகாப்பு வேண்டும்

தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன், வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது. எனவே இனிவரும் காலங்களில் கோயிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்கப் பட வேண்டும்.

நேற்று முன்தினம் கனகசபையில் பூஜையில் இருந்த கற்பக கணேசன் என்ற தீட்சிதரை அறநிலையத் துறையினர் ற்றும் காவல் துறையினர் தள்ளி விட்டு, அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று குற்றஞ்சாட்டினர்.

தீட்டு எனக் கருதி, அந்த தீட்சிதர்..

இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், "தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர். அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்.

காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.

‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாது’ என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி, அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை" என்று கூறினர்.

முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chidambaram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment