Advertisment

சிதம்பரம்: அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக முன்னாள் எம்.பி வேட்பு மனு; சர்ச்சை வெடிப்பதற்குள் தள்ளுபடி

அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சந்திரகாசி சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால், அ.தி.மு.க-வினரிடையே குழப்பம் நீடித்தது.

author-image
WebDesk
New Update
Chidambaram Former MP Chandrakasi file nomination against ADMK candidate Tamil News

பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன், இருவருக்குமான மோதலை பயன்படுத்தி கொண்டு தன் ஆதரவாளரான சந்திரகாசனுக்கு சீட் வாங்கி கொடுத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Aiadmk | Chidambaram: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் சந்திரகாசன், பா.ஜ.க சார்பில் கார்த்தியாயினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

திருமாவளவனுக்கு இன்னும் பானை சின்னம் பெருவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அவரைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு சின்னம் உறுதியாகி விட்டது. எனினும், திருமாவளவன் போட்டியிடுவதால் சிதம்பரம் நட்சத்திர தொகுதியாகியிருப்பது மட்டுமன்றி, அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படும் தொகுதியாகவும் உள்ளது.

அதேநேரம், அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சந்திரகாசி சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால், அ.தி.மு.க-வினரிடையே குழப்பம் நீடித்தது. ஆனாலும், மனுத்தாக்கல் செய்த பிறகு சந்திரகாசனுடன் சந்திரகாசி பிரசாரத்திற்குச் சென்றது, அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கையில், "சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க சார்பில் போடியிடுவதற்கான ரேஸில் சந்திரகாசன், சந்திரகாசி, கடந்த முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சந்திரசேகர் ஆகியோர் இடம்பிடித்தனர். சந்திரசேகர் தற்போது அரியாலூர் மாவட்ட சேர்மனாக இருக்கிறார். 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்  திருமாவளவனுக்கு எதிராக களமிறங்கிய சந்திரசேகர் வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவினார். சந்திரசேகரின் அனல் பறக்கும் பிரசாரத்தால் திருமா சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார்.

இதனால், இந்த முறையும் சந்திரசேகருக்குத்தான் சீட் கிடைக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அரியலூர் மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன், அ.தி.மு.க தலைமையிடம் சந்திரகாசிக்கு சிபாரிசு செய்திருந்தார். சந்திரசேகருக்கும், தாமரை ராஜேந்திரனுக்கும் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு இருக்கும் காரணத்தால், சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுக்கும் முயற்சியை கையில் எடுத்தார். 

இதற்கிடையே, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன், இருவருக்குமான மோதலை பயன்படுத்தி கொண்டு தன் ஆதரவாளரான சந்திரகாசனுக்கு சீட் வாங்கி கொடுத்தார். தாமரைக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் மறைமுக முட்டல், மோதல்கள் கட்சிக்குள் நிலவுவதால், சந்திரகாசனை வேட்பாளர் லிஸ்ட்டில் இருந்து எடுப்பதற்கு காய் நகர்த்தினார் தாமரை.ராஜேந்திரன்.

இதைத் தொடர்ந்து கடைசி நாளான நேற்று சந்திரகாசி மனு தாக்கல் செய்ய வைத்தார். சுயேச்சை வேட்பாளராக அ.தி.மு.க தலைமையை எதிர்த்து அ.தி.மு.க கரை வேட்டி கட்டிக்கொண்டு சந்திரகாசி மனு தாக்கல் செய்ததுடன், மாலை சந்திரகாசனுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டது வேடிக்கையாக இருந்தது. இந்த செயல் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மாற்று வேட்பளாராக சந்திரகாசி மனுத்தாக்கல் செய்திருக்கிறார் என தாமரை தரப்பு சமாளித்தாலும், சந்திரகாசனுக்கு மாற்று வேட்பாளராக ராஜ்குமார் என்பவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவாவதற்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதகமாக பேசி வந்தார் திருமாவளவன். பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலக வேண்டும் என்றெல்லாம் பேசி வந்தார். இதையெல்லாம் கோர்த்து அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பிடிக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனாலும் தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார் திருமாவளவன். இந்த பரபரப்பான சூழலில் இன்று சந்திரகாசியின் வேட்பு மனு,  சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது" என்றனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Aiadmk Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment