Advertisment

மீண்டும் கரை சேருவரா திருமா? - சிதம்பரம் கள நிலவரம் என்ன?

2019-க்கு முன்பே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் திருமாவளவனுக்கு உண்டு என்றாலும் அப்போது தொகுதியில் இருக்கும் இதர சாதியினரின் வாக்குகளால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
chidambaram lok sabha constituency Thol Thirumavalavan VCK P Karthiyayini	BJP M Chandrahasan	AIDMK Jansi Rani NTK Tamil News

சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), புவனகிரி, அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Chidambaram | Lok Sabha Election 2024 | Thirumavalavan: கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியையும் இணைத்து 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தொகுதி தான் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி. தமிழகத்தில் நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருக்கும் தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இடம் பெயர்ந்துள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று புகழ்பெற்ற பல்வேறு இடங்கள் கொண்டது இதன் தனிச்சிறப்பு.

நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொகுதி. சிமென்ட் தொழிற்சாலைகள், தனியார் கரும்பாலை ஆகியவை இந்தத் தொகுதியின் பொருளாதாரத்தைக் கட்டமைக்கின்றன.இவற்றைத் தவிர வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும் இந்தத் தொகுதியில் இல்லை.

கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பலமுறை காங்கிரஸ் இங்கு வென்றுள்ளது. இருப்பினும், தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு கணிசமான வாக்கு வாங்கி உள்ளது. இதைத் தவிர பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இங்கு வாக்கு வங்கி உண்டு. சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை போட்டியிட்ட வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், 2019-ம் ஆண்டு தேர்தலில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸின் வள்ளல் பெருமான், பா.ம.க-வின் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.   

சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), புவனகிரி, அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,10,915 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 7,49,623, பெண் வாக்காளர்கள் 7,61,206, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 86 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், மீண்டும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன். கடந்தமுறையே தட்டுத் தடுமாறித்தான் கரை ஏறினார். இப்போது தொகுதிக்குள் பரவலாக அதிருப்தி அலையடிக்கும் சூழலில் வெற்றி அவருக்கு கைகூடுமா? என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது.

2019-க்கு முன்பே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் திருமாவளவனுக்கு உண்டு என்றாலும் அப்போது தொகுதியில் இருக்கும் இதர சாதியினரின் வாக்குகளால் அவர் தோற்கடிக்கப்பட்டார். இருந்தாலும் கடந்த முறை அவர் சிதம்பரத்தில் மீண்டும் நின்றார். 

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க கூட்டணி பெருவெற்றி பெற்றதால் அதன் தாக்கத்தில் சிதம்பரத்திலும் திக்கித் திணறி திருமாவும் வென்றார். அப்படி வெற்றி பெற்ற அவர் சிதம்பரம் தொகுதியை தனக்கு மிகவும் நெருக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கட்சியின் தலைவர் என்பதாலும், மேல்மட்ட அரசியல் செய்யும் காரணத்தாலும் அவர் கடந்த ஐந்தாண்டு காலத்தில் சிதம்பரம் தொகுதிக்குள் பெரிதாக தலைகாட்டவில்லை. பெரிய திட்டங்களை தொகுதிக்கு அவர் கொண்டுவந்ததாகவோ தொகுதி பிரச்சினைகளுக்காக போராடியதாகவோ செய்திகள் கூட இல்லை. இதனால் தங்கள் தொகுதியின் எம்பி திருமாவளவன் தான் என்பதையே சிதம்பரம் மக்கள் மறந்து விட்டனர். 

இந்த நிலையில், மீண்டும் அவர் சிதம்பரத்தில் நிற்கிறார். கரூர் ஜோதிமணி போலவோ, சிவகங்கை கார்த்தி சிதம்பரம் போல தி.மு.க-வினருடன் திருமா எந்த முரண்பாடும் கொள்ளவில்லை. அனைவரிடமும் இணக்கமாகவே இருக்கிறார். இதை மேற்கோள்காட்டும் வி.சி.க-வினர், “திருமாவளவன் எம்பி ஆனால் சிதம்பரம் தொகுதிக்குள் சாதி கலவரங்கள் தலைவிரித்தாடும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனால் தான் கடந்த முறை சொற்ப ஓட்டில் திருமா ஜெயிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அப்படி எந்த சாதி கலவரமும் சிதம்பரம் தொகுதிக்குள் நடக்கவில்லை. இதை உணர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளில் இருக்கும் வன்னியர்களும் இம்முறை திருமாவுக்கு வாக்களிக்க தயாராய் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சிவசங்கருக்கும் திருமாவை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பை ஸ்டாலின் ஒப்படைத்திருக்கிறார். மூவருமே திருமாவுக்காக இப்போது களத்தில் நிற்கிறார்கள். அதனால் திருமாவைவிட அதிருப்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இப்போது இவர்கள் தலையில் விழுந்திருக்கிறது.

திருமாவளவன் - கார்த்தியாயினி - சந்திரஹாசன் - ஜான்சிராணி

பா.ஜ.க கூட்டணியில் அதிமுகவும் இருந்திருந்தால் இம்முறை திருமா கரைசேருவது கடவுள் புண்ணியம் என்று இப்போதே சொல்லி இருக்க முடியும். அப்படி இல்லாமல், பா.ஜ.க-வைவிட்டு அ.தி.மு.க விலகிவிட்டது. இப்போது தன்னை எதிர்த்து இரண்டு கூட்டணிகள் நிற்பதால் சிதம்பரத்தை மீண்டும் திருமா தக்கவைப்பார் என்றே தெரிகிறது.

இவருக்கு எதிராக சந்திரஹாசன் (அ.தி.மு.க), பி.கார்த்தியாயினி (பா.ஜ.க), ஆர்.ஜான்சிராணி (நா.த.க) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இதில் திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தாமரைபூண்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் அ.தி.மு.க சார்பில் களத்தில் சுழன்றுக்கொண்டிருக்கின்றார். இவர் உதவி வேளாண் அலுவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தவர். கடந்த 2001 - 2006 வரை செந்துறை ஒன்றிய குழுத் தலைவராக இருந்தார். தற்போது அ.தி.மு.க இலக்கிய அணியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் அவர் திருமாவுக்கு கடும் போட்டியை கொடுக்கின்றார்.

இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி களமிறக்கப்பட்டிருக்கின்றார். இவர் கடந்த காலங்களில் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதியை விமர்சித்து, அதற்கு எதிராக வேலூர் மாநகராட்சியில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, பின்னர் தார்மீக மன்னிப்பு கோரி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தமக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் டெல்லி சென்று அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு மாநில செயலாளார் பதவியைப் பெற்றவர், தற்போது மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது சிதம்பரம் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் கார்த்தியாயினி. 

சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூரின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தொகுதியாக இருப்பதால் இந்தத் தொகுதிக்கு சொந்தக்காரர்களை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். வெளியூர்காரர் என்ற பலவீனத்தால், திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்கொள்ள முடியாமலும், வன்னியர் சமுதாயம் நிறைந்த இந்தத் தொகுதியில் பாஜகவில் பாமக இணைந்தது பிடிக்காமல், பாமகவை சார்ந்த ஒருசாரார் பா.ஜ.க-வில் ஐக்கியமான பாமகவுக்கு எதிராக வேலை செய்து வருவதால் திணறிக்கொண்டிருக்கின்றார் சிதம்பரத்தில் கார்த்தியாயினி.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளராக பெரம்பலூரைச்சேர்ந்த ஜான்சிராணி களத்தில் இருக்கின்றார். சீமான் பலம் மற்றும் தமது சொந்த தொகுதிக்குள் நிற்பதால் உள்ளூர் பலம், மாற்றத்தை விரும்பும் இளசுகளின் பலத்தால் சிதம்பரத்தை சுற்றி வந்துக்கொண்டிருக்கின்றார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை, பலமுறை களம் கண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் சிதம்பரத்திற்கு வரவில்லை என்றாலும், அவரது சாதிய வாக்குகள் அப்படியே அவருக்கு சென்றடைவதும், வன்னியரின் ஒரு பிரிவினர் பா.ஜ.க - பா.ம.க கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குகளை பிரிப்பதாலும், தி.மு.க கூட்டணியின் பலத்தாலும் இந்தமுறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கரைசேரலாம் என கருதப்படுகின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thirumavalavan Chidambaram Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment