ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளை நியாயப்படுத்த தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆர்.ஜி.ஆனந்த் பொய்களை கூறுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு எதிரான குழந்தைத் திருமண வழக்கில் மருத்துவப் பரிசோதனை செய்த மைனர் சிறுமிகளுக்கு மருத்துவர்கள் இருவிரல் பரிசோதனை செய்ததாக தற்போது அவர் மாற்றி கூறியுள்ளார் என்றும் முன்பு அவரே இந்த சோதனை சிறுமிகளுக்கு செய்யப்படவில்லை என்று மறுப்பு கூறியிருந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விவகாரத்தில், ஒரு சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். உடனடியாக அதற்கு சுகாதாரத் துறை சார்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது தேசிய குழந்தைகள் நல ஆணையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2 மருத்துவர்களிடம் நடந்த விசாரணையின்போது, அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பெண்களை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்பதும், வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் எங்கள் கடமையை செய்து வருகிறோம் என்று தெளிவாக கூறியுள்ளனர். அதன்படி, தாங்கள் இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என்றும் இருவரும் உறுதியாக மறுப்பு தெரிவித்தனர்.
அப்போது இதை ஏற்றுக் கொள்வதாகப் பேசிய தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை மருத்துவர் ஒருவர், சிறுமிக்கு அதுபோன்ற பரிசோதனை நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரிகிறது. எனவே, அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். ஆனால், தற்போது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஆளுநரின் கருத்தை உண்மையாக்க முயற்சி செய்துள்ளார். இது முறையானது அல்ல என்றார்.
மேலும், நேர்மையான விசாரணை மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதற்கு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற செயல்களால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிவிடும். மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லி செல்லும் போது மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களுடன் முறையீடுவோம்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil