சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பொது தீட்சிதர்கள் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், கோவிலுக்குள் எந்த அதிகாரத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று பொது தீட்சிதர்களிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பொது தீட்சிதர்கள் கட்டுமானங்களை மேற்கொள்வதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவ் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, பழமையான கோவில்களில் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் எதும் மேற்கோள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. அதையும் மீறி, இந்த கோவிலுக்குள் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
மேலும், எந்த மாதிரியான பணிகள் நடக்கிறது என்பதே தெரியவில்லை என்பதால் இந்த பணிகளுக்கு எல்லாம் தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், எந்த கட்டுமாங்களும் மேற்கொள்ளப்படாது என்று உத்தரவாதம் அளிக்கிறீர்களா அல்லது தடை விதிக்க வேண்டுமா என்று பொது தீட்சிதர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோவிலுக்குள் எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்று பொது தீட்சிதர்கள் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மனுவுக்கு பொது தீட்சிதர்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“