சிதம்பரம் தீட்சிதர்களுக்கும், தமிழக அறநிலையத்துறைக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் உடனான இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜன் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இதனிடையே, இந்தக் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தமிழக அரசு, எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த மே மாதம் அரசாணை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, நிதி மோசடி, குழந்தை திருமணம் என சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது சர்ச்சைகளும், புகார்களும் எழுந்து வருகின்றன. இந்த சூழலில், கடந்த வாரம் கோயில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்தனர். இதற்கு பொதுமக்களும் இந்து சமய அறநிலைத்துறையும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த பிரச்சினை மீண்டும் காவல் நிலையம் வரை சென்று போராட்டத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது.
4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கனக சபையில் பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறைக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அறநிலையத்துறை முயன்று வருகிறது. இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். விரைவில் சிதம்பரத்தில் பெரும் போராட்டத்தை பாஜக நடத்தும் என அறிவித்தார்.
இதுபோன்ற சூழலில் தான், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் குழு திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. நேற்று இரவு (ஜூலை 1) நடைபெற்ற இந்த சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் நிதியமைச்சரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.
மேலும், சிதம்பரம் கோயிலில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் நடந்து வருகின்றன. அறநிலையத்துறை எப்படி தங்களை தொந்தரவு செய்கிறது என இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் தீட்சிதர்கள் குழு எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கும் பாஜக விரைவில் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்துள்ளதும், சிதம்பரம் தீட்சிதர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.