Election Commission: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பரபரப்பாக ஈடுப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அவ்வகையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய்பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் வந்தனர்.
10 கட்சிகள் பங்கேற்பு
இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
2 நாள் ஆலோசனைக் கூட்டம்
சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை இந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மக்களை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்க உள்ளது. அவர்களிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் பெறப்படும்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
இரண்டாம் நாளான நாளை காலை, 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆலோசகர் கொண்ட குழு ஆலோசனையை நடத்துகிறது. அப்போது தங்கள் மாநிலங்களின் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகிறது.
இதன் பிறகு காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, ஐடி துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இதன்பின்னர், தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சுமுகமாக லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“