தமிழகத்தில் கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அதற்கான இடங்களை அடையாளம் காண வேண்டியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் சட்டப்பேரவை மே மாதம் முடிவடைகிறது. அதனால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டியுள்ளதால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக கூடுதல் வாக்குச்சாவடிகளைக் கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. கொரோனா பரவல் காரணமாக ஒரு ஓட்டுச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு அளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு இயந்திரங்களை மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"