முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க தடையில்லை : முறையீட்டை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் படி, உண்ணாவிரதம் இருக்க உரிமை அனைவருக்கும் உள்ளது. இந்த முறையீட்டில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.

முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் மேற்கொள்வதை சூமோட்டோ வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முறையீட்டை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நிராகரித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அழுத்தம் தரவும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக கட்சி தலைமை அறிவித்தது. இதற்காக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் பட்டியலும் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு ஆளும் அரசின் முதல்வராக இருப்பவரும், துணை முதல்வராக இருப்பவரும் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாக கூறி சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திர பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இன்று முறையீடு செய்தார்.

அப்போது மத்திய அர்சுக்கு எதிரான உண்ணவிரத போராட்டம் நடத்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நடவடிக்கைகள் அவர்களின் பதவியேற்பு உறுதிமொழிக்கும், ரகசிய காப்பு பிரமானத்திற்கு எதிராக செயல்படுவதாகும், இந்த பிரச்சனையில் தமிழக ஆளுநர் அவர்கள் முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க தவறிவிட்டார். எனவே ஆளுநர் செயல்படாத நிலையில் தலைமை நீதிபதி என்ற முறையில் ஆட்சியை கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் இதை சூமோட்டோ வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் படி, உண்ணாவிரதம் இருக்க உரிமை அனைவருக்கும் உள்ளது. இந்த முறையீட்டில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. விரும்பினால் மனுவாக தாக்கல் செய்தால் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து முறையீட்டை மறுத்துவிட்டனர்.

×Close
×Close