scorecardresearch

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் – முதல்வர் பழனிசாமி உறுதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு ஊடகங்களில் உரையாற்றுகிறார். முதல்வரின் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் – முதல்வர் பழனிசாமி உறுதி
Tamil News Live Today : சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம்

தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து, இன்று ஊடகங்கள் மூலம் மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க 5வது கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. நோய்க் தொற்று அளவைப் பொறுத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது: “நாம் பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொண்டிருக்கிறோம். அதே போல இந்த உலகம் முழுவதும் பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா நோய் தடுப்பில் நாம் வெற்றி காண்போம் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம். கடந்த 2 மாதங்களாக ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கடந்தது போல உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதாரவுடனும் கடந்து வந்துள்ளோம். உண்மையில் இந்த கொரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டுமல்லாமல் நம் பொருளாதாரத்தையும் சாய்த்துவிட்டது. வறட்சி, சுனாமி, வர்தா, ஒக்கி, கஜா போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு தமிழக அரசு வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட செய்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டது குறித்து அறிந்தவுடன் ஜனவரி 2020 முதல் விரைந்து செயல்பட்டு துரிதமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன். தமிழ்நாட்டில் 7.03.2020 அன்று முதன் முதலில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட உடன் களத்தில் பல்முனை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. சமூகப் பரவல் என்ற நிலைக்கு ஒருபோது தமிழகம் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தனித்திருங்கள், விழித்திருங்கள், வீட்டிலிருங்கள் என்று எனது கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதை நான் அறிவேன்.

 

சகோதர, சகோதரிகளே இந்த ஊரடங்கினால் பல்வேறு கட்டுப்பாடுகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். வீட்டிலேயே முடங்கி இருப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். தனிமனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை நாம் உணர வேண்டும். நமது கூட்டு முயற்சியினால் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுமட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழகத்தில்தான் உயிரிழப்பு சதவீதம் மிகவும் குறைவு. இதற்காக, மருத்துவ வல்லுனர்கள், பொது சுகாதார வல்லுனர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் தமிழக அரசை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றை கண்டறிய பரிசோதனையை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகள் மூலம் 86 சதவீதம் கொரோனா தொற்று கொண்டவர்கள் எவ்வித அறிகுறியையும் இல்லாதவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நோய்தொற்றின் தகவல்களை பகிர்ந்துகொள்ள வலைதளம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை கண்காணிப்பதற்கு ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர், எல்லைப் பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால் தொற்று ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் தவிர்க்கப்பட்டது. இதனால், ஏழை, எளிய, நடுத்த மக்களின் சிரமங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன.இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் தடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த நோய்த்தொற்றினை ஒரு பேரிடராக அறிவித்து இதுவரை ரூ.4,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.” இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chief minister edappadi k palaniswami speaking on actions against coronavirus

Best of Express