முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
Advertisment
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ம் தேதி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், முதல்வர் பழனிசாமி அடுத்தடுத்து அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமி கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.
அந்த வகையில், முதல்வர் பழனிசாமி அக்டோபர் 5ம் தேதி மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திப்பார் என்று நேற்று செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அவருடன், அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பெஞ்சமின், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
அப்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆகப் பிரித்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"