Mk Stalin | Tiruchirappalli | Lok Sabha Election | ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுவது கோழைத்தனமானது என திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் நேரிடையாக போட்டியிட உள்ளது.
மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் காங்கிரசுக்கு 9, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சி சிறுகனூரில் இன்று திமுகவின் முதல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்கியது
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு ஆகியோரை அறிமுகப்படுத்தி, ஆதரித்து திருச்சி சிறுகனூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், "திருச்சி என்றாலே திருப்பு முனைதான். திமுகவை தொடங்குவது என முடிவெடுத்தது திருச்சியில் தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப்பாதை என்பதற்கு அடையாளமாக 6 முறை மக்கள் வெற்றியை தந்துள்ளனர்.
பல திருப்புமுனைகளை நமது தமிழகத்துக்கு கொடுத்து, தனது வாழ்நாள் எல்லாம் உழைத்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நினைவுப் பரிசாக ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்காக தொடக்கமாக நாம் திரண்டிருக்கிறோம். வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி நாற்பதுக்கு நாற்பது.
தேர்தல் என்பதால் பிரதமர் இப்போது இந்தியாவில் இருக்கின்றார். தேர்தல் இல்லை என்றால் அவர் வெளிநாட்டில்தான் இருப்பார். தேர்தல் வந்திருப்பதால் அடிக்கடி இப்போ தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.
அப்படி சமீபத்தில் சேலம் வந்த மோடி தமிழ்நாட்டில் தமக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டது எனக்கூறியதோடு, திமுகவுக்கு தூக்கம் தொலைந்துள்ளது என்றார். உண்மையில் பாஜக ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் தான் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை.
தனது ஆட்சி முடியப்போகிறது என்பதால் தான் பிரதமர் மோடிக்குத் தான் தூக்கம் வரவில்லை. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் நான் ஒரு கேள்வி தான் கேட்டேன்.
அவர் வாரம் வாரம் வந்தாலும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பிரதமரால் தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு சிறப்பு திட்டத்தை சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு இனி வரும்போதும் கூட பிரதமர் பதில் சொல்ல மாட்டார். ஆனால் அவர் நம்மை விமர்சிக்கிறார். தோல்வி பயம் பிரதமர் மோடியின் முகத்திலும், கண்ணிலும் தெரிகிறது.
ராஜ்பவனில் இருந்தே தேர்தல் பிரச்சார தொடங்கியதாக ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன். அவரும் பெஸ்ட் ஆப் லக் என்றார். தமிழர்களை கொச்சைப்படுத்தத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்தான் மூத்த மொழி என்று பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
ஆனால், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்”. பாஜக ஆட்சியை வீழ்த்தி, மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல்.
திராவிட மாடல் ஆட்சியில் 3 ஆண்டுகால சாதனை பட்டியல் சொல்ல வேண்டுமா? அந்த சாதனையை சொன்னால் ஒருநாள் போதாது. நலத்திட்டங்கள் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று வீடியோ பார்த்தேன்.
அப்போது குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் காசுக்காக யாரையும் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார். தாய்வீட்டு சீராக மாதம் ரூ.1000 வழங்குகிறார் என ஒரு சகோதரி கூறினார்.
மேலும் விடியல் பயணம் திட்டத்தில் இலவச பேருந்தில் சென்று கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து வேலைக்கு செல்வதாக இன்னொருவர் கூறினார். இப்படி மக்களுக்கான பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
மாநிலத்தை ஆளும் நாங்கள் தாங்க முடியாத நிதி நெருக்கடியிலும் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் செய்திருக்கின்றோம். 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல இன்று ஒருநாள் போதாது.
மகளிர் உரிமை திட்டத்தல் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்றவர் திருச்சி புதிய பேருந்து நிலையம், நவல்பட்டு புதிய தகவல் தொழில் நுட்ப மையம் என பல்வேறு நலத்திட்ட பணிகளை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் அவர் பேசுகையில்; பாஜக ஊழல் செய்து வருகிறது. பாஜக அரசின் தோல்விகளை மறைக்கவே தேவையில்லாத விஷயங்களை மோடி பேசி வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் நீங்கள் நடத்தும் கபட நாடகங்களை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். பழனிசாமி பாஜகவை மட்டும் விமர்சித்து பேசமாட்டாராம். பாஜகவும் அதிமுகவும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு இந்த தேர்தலை சந்திக்கின்றது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரதமர் மோடி நிவாரண நிதியில் பல்லாயிரக்கணகான கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ‛இந்தியா’ எனும் வலிமையான கூட்டணி அமைந்துவிட்டதாக நினைத்து அந்த பயத்தில் தவறுக்கு மேல் தவறுகளை மத்திய அரசு செய்கிறது. I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜகவின் ஊழல்களை அம்பலமாகும்.”
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, மணிஷ் சிசோடியோ, ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா, இதெல்லாம் தேர்தலில் பாஜகவின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுவது கோழைத்தனமானது இல்லையா. வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் ‛இந்தியா’ வெல்லும். இந்தியாவையும், ‛இந்தியா’ கூட்டணி வெல்லும்’’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்துக்கொண்டனர். சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. 350-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.