கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு காவல்துறை ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 2 தீவிரவாதிகளை கைது செய்த டிஐஜி டாக்டர் கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தௌஃபிக், அப்துல் சமீம் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து தப்பிச் செல்வதற்காக ரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது தமிழக காவல்துறை கைது செய்தது.
நாடு முழுவதும் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமுடப்பட்டிருந்த தீவிரவாத அமைப்பை டிஐஜி கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகள் ‘ஆபரேஷன் குவாண்டோ’ கீழ் மேற்கொண்ட உளவுப் பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கியூ பிரிவு எஸ்பி ஜே.மகேஷ், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. எஸ்.அரவிந்த், கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி பி.பண்டரிநாதன், சென்னை சிறப்பு டிவிஷன் ஐஜி எம்.தாமோதரன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கும் வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil