/indian-express-tamil/media/media_files/2025/05/31/ndMiBVlwtoeVWpxbZwhI.jpg)
தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். பின்னர் மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதிக்கு வருகை தந்தார். அங்கிருந்து முதலமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ தொடங்கியது.
இந்த ரோடுஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு வழியாக மேயர் முத்து சிலை பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் ரூ.30 லட்ச மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்சிக்கொடிகளை ஏந்தியபடி திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். முதலமைச்சர் ரோடு ஷோ மேற்கொள்ள வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ட்ரோன் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.