தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவை கூறித்தும் கோடநாடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். இந்தப் பேட்டி, அடுத்த நாள் முரசொலி நாளிதழில் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த சம்மனை ரத்து செய்யவும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் ரீதியாக பழிவாங்க இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதனையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தும், ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார் நீதிபதி.
மேலும் இந்த மனு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் தள்ளிவைத்தார்.