மீண்டும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: 'சம்பளம், லீவ் கிடையாது'! - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், “புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமும், 23, 24ம் தேதிகளில் தாலுகா தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் 25-ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

தொடர்ந்து 26ம் தேதி சென்னையில் ஜாக்டோ -ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்த கட்ட பேராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். இதற்கிடையே போராட்டத்தை தடுக்க எந்த வித இடையூறு வந்தாலும் கே.ஜி. வகுப்புகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாற்றம் தொடர்பான ஆணைகளை பெறவோ, பணியில் சேரவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது. ஜனவரி 22ம் தேதி காலை 10.30 மணிக்குள் ஊழியர்களின் வருகைப் பதிவு குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை தினமும் வருகைப் பதிவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தலைமை செயலாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close