தமிழகத்தில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் துண்புறுத்தல் நிகழ்வுகள் குறைந்தபட்சம் மாதம் ஒரு நிகழ்வாவது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த மாதம், தருமபுரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சிவராமன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து திருச்சி என்.ஐ.டி-யில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்கள் மத்திய்ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தருமபுரியில் தனியார் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், வாள்பாறை அரசு கலைக்கல்லூரியில், மாணவிகளிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட 3 தற்காலிக பேராசிரியர்கள், ஒரு ஆய்வக உதவியாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வி அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை (செப்டம்பர் 2) ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்துக் கல்லூரிகளிலும் கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும்; கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்காக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் அந்த குழுக்கள் முறையாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க திடீர் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், பாலியல் தொல்லையில் ஈடுபடுபவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“