chennai-rain | தமிழக தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா இன்று (டிச.7) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னையில், நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, “சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும்” என்றார்.
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக, கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“