7 வயது சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டு சுமார் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால், ஹாசினி கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ளன.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த 7 வயது சிறுமி, இதேபோன்றதொரு பிப்ரவரி மாதத்தில் தான் தனது அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால், அச்சிறுமி திடீரென மாயமானதையடுத்து அவளது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். எங்கும் கிடைக்காததால், பதறிய அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பின், போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. அதன்பின், அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், இளைஞர் ஒருவர் ஏதோவொரு மூட்டையை தன் தோளில் சுமந்துசெல்வது பதிவாகியிருந்தது. நன்கு விசாரித்ததில், அந்த இளைஞர் அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தஷ்வந்த் என்பது தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில் தஷ்வந்த், சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சிறுமியின் சடலத்தை பையில் போட்டு நெடுஞ்சாலைக்கு எடுத்துச்சென்று எரித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். ஆனால், போலீசார் குறித்த நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தஷ்வந்தின் தாய் சரளா, அவரது இல்லத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். பணத்துக்காக தஷ்வந்த் தன் தாயையே கொலை செயது தலைமறைவாகிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி தஷ்வந்தை தமிழக போலீசார் மும்பையில் கைது செய்தனர். ஆனால், போலீசாரிடமிருந்து தஷ்வந்த் மீண்டும் தப்பித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 24 மணிநேரத்தில் மீண்டும் தஷ்வந்தை போலீசார் தேடி கண்டுபிடித்து சென்னை அழைத்துவந்தனர்.
இதன்பின், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த், சிறுமி ஹாசினியை தான் கொலை செய்ததாகவும், தனக்கு உடனடியாக தண்டனை வழங்குமாறும் கூறியதாக தகவல் வெளியாகியது.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த குற்றத்தை புரிந்தவருக்கு வழங்கப்படும் தண்டனை, இத்தகைய குற்றங்களை செய்ய நினைப்பவருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.