கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, சித்ரா மற்றும் மீனா ஆகிய இரு தமிழக சமூக நல அதிகாரிகளின் புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 2022-ல் 4 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கோவில் வளாகத்தில் குழந்தை திருமணங்களை நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பூசாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். கோவிலில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதைக் காட்டும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்ததால், இந்த மாதம் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி கூறியதாவது: “சட்டவிரோத நிகழ்வின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை ஆளுநர் ஆதரிக்கிறார், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்தை தாக்குகிறார்.” என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம், குழந்தை திருமண நடந்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கூறி, வழக்கை கையாண்டதற்காக அரசாங்கத்தை ரவி விமர்சித்தார். மேலும், அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, சித்ரா மற்றும் மீனா ஆகிய இரு தமிழக சமூக நல அதிகாரிகளின் புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 2022-ல் நான்கு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரியவந்துள்ளது.
போலீஸ் ஆவணங்களின்படி, 2021-ல் மூன்று திருமணங்களும் ஜூன் 2022-ல் ஒரு திருமணமும் நடந்தன. கோவிலில் இருந்து இரண்டு தீட்சிதர்கள் அக்டோபர் 2022-ல் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். மொத்தம் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க உள்ளூரில் தகவல் தருபவர்கள், சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்படுவதாக மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். “விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் நாங்கள் அதிக வழக்குகளை பதிவு செய்யவில்லை. ஆளுநர் அரசாங்கத்தின் நோக்கங்களைக் கூறி அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட முடிவு செய்தோம்” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
மே மாதம் ஆளுநரின் அறிக்கைக்குப் பிறகு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) உறுப்பினரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகருமான ஆர்.ஜி. ஆனந்த், சிறுமிகள் குழந்தைத் திருமணங்களில் ஒரு பகுதி என்று கூற கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
குழந்தை திருமணத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்துள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து, மே 24-ம் தேதி சிறார்களுக்கு இரு விரல் சோதனை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆனந்த் கூறினார். இருப்பினும், மே 25-ம் தேதி கவர்னரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவை என்று அவர் சமூக ஊடக பதிவுகளில் கூறினார்.
ஐந்து நாட்களில், ஆனந்த் அறிக்கையின் நகலை ராஜ்பவனில் சமர்ப்பித்தார். சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர் சமூகத்தைச் சேர்ந்த மைனர் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பான விசாரணை தொடர்பான அறிக்கை இது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் டி.ஜி.பி சி. சைலேந்திர பாபு, மருத்துவ பதிவுகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் அப்படி எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கின்றன.
பதஞ்சலி முனிவரிடமிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படும் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் சமூகத்தால் சிதம்பரம் கோயில் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் சமூகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"